அகரமேல் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 40 வாக்குகள் கூடுதலாக பதிவு?- அதிகாரிகளுடன் வாக்குவாதம்
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது.
- திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
பூந்தமல்லி:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர் மொத்தம் 346 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலையில் வாக்குப்பதிவு முடிந்தபோது பூத் ஏஜெண்டுகள் அ.தி.மு.க., சுயேட்சை வேட்பாளர்கள் 289 வாக்குகள் பதிவானதாக தெரிவித்தனர்.
ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 329 வாக்குகள் பதிவானதாக கூறினர். இதனால் 40 வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதிவானது என தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாக்குகள் பதிவான எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி களைந்து போகச்செய்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும்போது, ' புகார் அளித்தால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டது.