தமிழ்நாடு

சென்னையில் 8 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு- மாறுவேடத்தில் கண்காணிப்பு பணி தீவிரம்

Published On 2022-12-24 08:41 GMT   |   Update On 2022-12-24 08:41 GMT
  • சென்னையில் உள்ள 350 கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
  • சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

சென்னை:

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பண்டிகையைக் கொண்டாட மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நகை பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பாரிமுனை அந்தோணியார் ஆலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கதீட்ரல்) ஆலயம், சைதாப்பேட்டை சின்னமலை ஆலயம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வரும் கிறிஸ்தவ ஆலயங்களில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.

போலீஸ் ரோந்து வாகனங்கள் முக்கியமான பகுதிகளில் தொடர் ரோந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், 'டிரோன்' கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவ மக்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது, கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் இன்று இரவு தொடங்கி 2 நாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காதவாறு தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும் போலீசார் அங்கு ரோந்து செல்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள 350 கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

Tags:    

Similar News