ரெயில்வே கேட்டை மூடிவிட்டு அறையில் குறட்டை விட்டு தூங்கிய ஊழியர்- வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம்
- ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
- ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக பெருங்கருணை, கயப்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது.
இந்த ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வழியே ரெயில்கள் வரும்போது ரெயில்வேகேட்டை பூட்டி விட்டு பின்னர் ரெயில் கடந்து சென்ற பின்னர் திறப்பது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு சென்னை நோக்கி சென்ற ரெயிலுக்காக ஊழியர் ஆனந்த் ரெயில்வே கேட்டை மூடினார். பின்னர் அவர் அங்குள்ள ஓய்வு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டி தூங்கி விட்டார்.
ரெயில் கடந்து சென்ற பின்னரும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 7 மணியை தாண்டியும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ரெயில்வே கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்த போது ஊழியர் ஆனந்த் குறட்டை விட்டு தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை தட்டி ஆனந்தை தூக்கத்தில் இருந்து எழச்செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது. பதறியடித்தபடி அவர் ரெயில்வே கேட்டை திறந்து விட்டார்.
எனினும் கடும்கோபத்தில் இருந்த வாகன ஓட்டிகள் ஊழியர் ஆனந்த்திடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் கடந்த பின்னரும் ஊழியர் ஆனந்த் சுமார் 20 நிமிடம் ரெயில்வே கேட்டை திறக்காமல் இருந்திருப்பது தெரியவந்து உள்ளது. ரெயில் வரும் நேரத்தில் அவர், ரெயில்வே கேட்டை மூடாமல் இருந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.