தமிழ்நாடு

மேகதாது பிரச்சனையில் கூட்டணி நலனுக்காக தமிழக நலனை புறக்கணித்த திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2024-08-01 06:36 GMT   |   Update On 2024-08-01 06:36 GMT
  • ஒட்டுமொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு.
  • காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னை:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மேகதாது அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்தியும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்-அமைச்சர் சிவக்குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தி.மு.க. அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களைத் தாரை வார்த்ததன் விளைவு, இன்று, மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் கட்சி. கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது தி.மு.க. என்ற கட்சியை அல்ல. காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது தி.மு.க.விற்குப் புதிதும் அல்ல.

ஆனால், ஒட்டுமொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தி.மு.க., உடனடியாக, தங்கள் கூட்டணியான காங்கிரஸ் கட்சித் தலைமையிடம், மேகதாது அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்துவதோடு, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் நலனையும் தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணிக்காக வழக்கம்போல காவு கொடுக்காமல் நடந்து கொள்ளும்படியும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News