தமிழ்நாடு

ஆவாரங்காட்டில் களைகட்டிய ஜல்லிகட்டு- திமிறிய காளைகளை பாய்ந்து அடக்கிய வீரர்கள்

Published On 2024-01-17 08:49 GMT   |   Update On 2024-01-17 08:49 GMT
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.
  • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணா மூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.

இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங்கப்பட்டது.


இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப் பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

போட்டியில 650 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் தட்சிணா மூர்த்தி மேற்பார்வையில் வருவாய்துறையினர். பொதுப்பணித்துறையினர், கால்நடை மருத்து வக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். இதே போல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

Tags:    

Similar News