மாணவர்களின் கல்வியை மேம்படுத்த பஸ் வசதி இல்லாத பழங்குடியின கிராமத்திற்கு பேட்டரி வாகனம்
- பழைய சர்க்கார்பதி கிராமத்தில் இருந்து சேத்துமடை வருவதற்கு போக்குவரத்து வசதி கிடையாது.
- முதல்கட்டமாக பழைய சர்க்கார்பதி கிராமத்திற்கு அந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனைமலை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை பகுதியில் பழைய சர்க்கார்பதி பழங்குடியின கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 5-ம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப்பள்ளியும் உள்ளது. மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் அடர்ந்த வனத்திற்கு நடுவே சுமார் 7 கிலோ மீட்டர் பயணித்து சேத்துமடை பகுதிக்கு வர வேண்டும்.
பழைய சர்க்கார்பதி கிராமத்தில் இருந்து சேத்துமடை வருவதற்கு போக்குவரத்து வசதி கிடையாது. மாணவர்கள் நடந்தே இங்கு வந்து படித்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாத காரணத்தால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பை தொடரமுடியாமல் கைவிட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இந்த கிராமத்தை சேர்ந்த 34 பழங்குடியின மாணவர்கள் எழுதவில்லை.
இந்த நிலையில் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் கல்வியை மேம்படுத்தவும் தொண்டு நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர். திட்ட நிதியில் இருந்து ரூ.2.5 லட்சத்தை ஒதுக்கீடு செய்து ஓட்டுநர் மற்றும் 12 மாணவர்களுடன் பயணிக்கும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.
முதல்கட்டமாக பழைய சர்க்கார்பதி கிராமத்திற்கு அந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நாகரூத்து, சின்னார்பதி, தம்மம்பதி, கோழிகமுத்தி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்கும் பேட்டரி வாகனம் வழங்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், தங்களைப் போல் இல்லாமல் தங்கள் தலைமுறைகளாவது கல்வி கற்று உயர்நிலை அடையவேண்டும் என்பது தங்கள் கனவாக உள்ளது. இதற்கு பஸ் வசதி தடையாக நிற்பது தங்களுக்கு வேதனை அளித்தது. தற்போது தனியார் நிறுவனங்கள் பேட்டரி வாகனம் வழங்கியிருப்பதால், எங்களது கிராம மாணவர்கள் உயர்கல்வி கற்பதில் போக்குவரத்து ஒரு தடையாக இருக்காது என பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.