தமிழ்நாடு

அனல்மின் நிலையம் முன்பு காண்டிராக்டர்கள் போராட்டம்- நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை

Published On 2023-06-09 07:12 GMT   |   Update On 2023-06-09 07:12 GMT
  • மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
  • பணிக்கு கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்று மூலப்பொருட்களை சப்ளை செய்து வந்தது.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதன் 4-வது நிலை மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு பகுதியில் அமைக்கும் பணி ரூ.9800 கோடி மதிப்பில் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த 4-வது நிலையின் மூலமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி இரண்டு அலகுகளில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்று மூலப்பொருட்களை சப்ளை செய்து வந்தது.

அந்த நிறுவனத்திற்கு மணல், ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்களை சப்-காண்டிராக்டர்கள் வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு அந்த நிறுவனம் தங்களால் மூலப் பொருட்களை வழங்க இயலாது என்று கூறி வெளியேறியது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட சப்-காண்டிராக்டர்களுக்கு நிலுவைத்தொகையை அவர்கள் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ரூ.10 கோடி வரை நிலுவைத்தொகை இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அனல்மின் நிலைய பணிக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்த சப்-காண்டிராக்டர்கள் 4-வது நிலை அனல் மின் நிலைய வாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவ்வழியே வேறு வாகனங்களையும் உள்ளே விடாமல் தடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து காண்டிராக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News