காஞ்சிபுரத்தில் நாளை 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
- கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
- நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்து வமனைகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகளிலும் கோவாக்சின் தடுப்பூசியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு மூலமாகவும் கோவிசீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (96.45 %) இலக்கையே எட்டியுள்ளது.
இதுவரை 2,03,453 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமம் வாரியாக ஆட்டோக்களின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமே நோய் எதிப்பு சக்தி முழுமையாக கிடைக்கும் . இரண்டு தவணை தடுப்பூசி போடப் பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மற்றும் இறப்பை தடுக்க முடியும் என இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.
நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும். எனவே நாளை (ஞாயிற்றுக் கிழமை) அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தபட்டுள்ள 1059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
18 முதல் 59 வயதினருக்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.