தமிழ்நாடு

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கான ஆகாய நடைபாலம் வடிவமைப்பு தயார்

Published On 2023-05-27 10:29 GMT   |   Update On 2023-05-27 10:29 GMT
  • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக அங்கு மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
  • மின்சார ரெயிலில் இருந்து வரும் பயணிகளும், ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் பயணிகளும் சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் வருவதில் சிரமம் உள்ளது.

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. ஜூலை மாதத்துக்குள் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் தென்மண்டலங்களில் இருந்து 65 ஆயிரம் பயணிகள் இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் வரை உயரும்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக அங்கு மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயிலில் இருந்து வரும் பயணிகளும், ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் பயணிகளும் சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் வருவதில் சிரமம் உள்ளது.

இதையடுத்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை புதிய பஸ் நிலையத்துடன் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலத்துக்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

கும்டா நிறுவனம் இந்த ஆகாய நடை மேம்பாலத்துக்கான வடிவமைப்பை உருவாகி உள்ளது. புதிய பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், ஜி.எஸ்.டி. சாலையை பயணிகள் எளிதாக கடக்கும் வகையிலும் இந்த ஆகாய நடை மேம்பாலம் வடிவமைக்கப்பட உள்ளது.

ஆகாய நடை மேம்பாலம் அமைப்பதற்காக 1.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் ரெயில் நிலையம் அமைக்கவும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்காக டெண்டர்கள் விடப்படுகிறது. இதையடுத்து ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி ஒரு வருடத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள ஆகாய நடைமேம்பாலம் 450 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் பேர் இந்த ஆகாய நடை மேம்பாலத்தில் சென்று வர முடியும். இந்த பாலம் பல இடங்களில் தரையில் இறங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. சாலை, ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் பிரதான நுழைவு வாயில், மாநகர பஸ்கள் நிறுத்துமிடம் ஆகிய இடங்களிலும் இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News