மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் உயர்கிறது- சென்னையில் இன்று மக்களிடம் கருத்து கேட்பு
- தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
- கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.
இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின் கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.
அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முதலில் கோவையில் பொதுமக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர்.
சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.
காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.
மதியம் 1.30 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.
உணவு இடைவேளைக்கு பிறகு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மீண்டும் கூட்டம் நடக்கிறது. மாலை 5.30 மணி வரை இந்த கூட்டத்தை நடத்த ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.
கோவை, மதுரை, சென்னையில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்படும். பயனுள்ள கருத்துக்களை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு மின் கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.
தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.
எனவே மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் மின் கட்டண உயர்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.