தமிழ்நாடு

மின் கட்டண இணைப்புடன் ஆதார் எண்ணை மீண்டும் இணைக்க மின் வாரியம் அழைப்பு

Published On 2023-01-17 05:12 GMT   |   Update On 2023-01-17 05:12 GMT
  • ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
  • மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறிகள் மற்றும் வீடுகளுக்கு மின் வாரியம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மானியம் விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு தனிப்பிரிவில் மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. இவற்றை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

முதலில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயங்கினார்கள். இதையடுத்து தமிழக அரசு உரிய விளக்கங்கள் அளித்தது அதோடு ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் 2811 மின் அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் டிசம்பர் 31-ந்தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர்தான் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர்.

இதையடுத்து ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் அவகாசம் உள்ளன. நேற்று வரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.

அவர்களையும் பட்டியலில் கொண்டு வருவதற்காக அவர்களது செல்போன் எண்ணுக்கு மின் வாரிய ஊழியர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். இதை தவிர மின் நுகர்வோர்களை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆதார் எண் இணைத்தவர்களில் சிலரது தகவல்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்து இருந்தவர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

நுகர்வோர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறால் மாயமாகி விட்டன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகு அதை மின் வாரிய தகவல் சேமிப்புடன் இணைக்கும் போது மின் நுகர்வோர்களின் தகவல்கள் சேமிக்கப்படாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதை மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது முகவரியில் குறிப்பிடப்பட்ட சில தகவல்கள் சேமிப்பாகவில்லை. அவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தாலும் தகவல்கள் சர்வரில் இடம்பெறாமல் போய்விட்டது" என்றார்.

இதையடுத்து விடுபட்ட தகவல்களை மீண்டும் இணைப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. எத்தனை பேரின் ஆதார் எண் இணைப்பு முழுமையாக சேமிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் விடுபட்டோர்களின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

அத்தகைய மின் நுகர்வோர்கள் மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2-வது தடவை ஆதார் எண்ணை இணைக்கும் போது ஓ.டி.பி. எதுவும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் எண் இணைப்பு விடுபட்டு இருப்பது மிக மிக சிலருக்கு மட்டுமே என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மின் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் வரவில்லை. நுகர்வோரின் தகவல்கள் மையங்களில் உடனுக்குடன் சேர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்குத் தான் இத்தகைய சிக்கல்கள் உருவாகி உள்ளது.

அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மின் இணைப்பு ஒருவரது பெயரிலும், ஆதார் எண்ணை இணைத்து வருபவர் வேறொரு பெயரிலும் இருக்கும் பட்சத்தில் அதை மின் வாரிய செயலி ஏற்காது. சிலர் தங்களது பெயரை எம்.கே.சாமி என்று முகவரியில் எழுதி இருப்பார்கள். ஆனால் மின் இணைப்பில் அவர்களது பெயர் முத்துக்குமார சாமி என்று இருக்கும். இத்தகைய நுகர்வோர் பெயர் குழப்பம் காரணமாகவும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் தந்தையின் பெயரில் இருக்கும் மின் இணைப்பை மகன் பயன்படுத்தி வருவார். அவரது ஆதார் எண்ணை பெயர் மாற்றம் செய்யாமல் இணைக்கவே இயலாது. இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிக்கல் நிலவுகிறது. அவை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை பொதுமக்கள் மிக எளிதாக உறுதி செய்யலாம். மின் இணைப்பு எண்ணுடன் மீண்டும் ஆதாரை இணைத்து பார்த்தால் அது இணைப்பு நடந்துள்ளதா இல்லையா என்பதை தெளிவாக காட்டி விடும்.

Tags:    

Similar News