தமிழ்நாடு

கீழ்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு தடை விதித்ததால் ஊர் தலைவரை கயிறு கட்டி இழுத்ததை படத்தில் காணலாம்.

எருது விடும் விழாவுக்கு தடை: ஊர் தலைவரை கட்டி இழுத்து விழா கொண்டாடிய கிராம மக்கள்

Published On 2023-02-05 04:05 GMT   |   Update On 2023-02-05 04:05 GMT
  • அனுமதி மறுக்கப்பட்டதால் எருதுவிடும் விழாவிற்கு காத்திருந்த காளைகளை அவிழ்த்து விட்டனர்.
  • எருதுவிடும் விழா நடைபெறாமல் போனால் சாமிகுத்தம் ஏற்பட்டுவிடும் என ஊர் பெரியவர்கள் கூறினர்.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் பொங்கல் முடிந்த பிறகு ஆண்டு தோறும் எருதுவிடும் விழா நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் எருதுவிடும் விழாவிற்கு கிராம மக்கள் பாரூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டனர்.

ஆனால் எருதுவிடும் விழாவிற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இதனால் காளைகளுடன் எதிர்பார்ப்பில் காத்திருந்த ஊர் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

அனுமதி மறுக்கப்பட்டதால் எருதுவிடும் விழாவிற்கு காத்திருந்த காளைகளை அவிழ்த்து விட்டனர்.

எருதுவிடும் விழா நடைபெறாமல் போனால் சாமிகுத்தம் ஏற்பட்டுவிடும் என ஊர் பெரியவர்கள் கூறினர். இதனால் கீழ்குப்பம் ஊர் கவுண்டர் சசிக்கு எருதுகளுக்கு போல் கயிறு கட்டி மாரியம்மன் கோவிலை மூன்று முறை வலம் வந்து அவிழ்த்து விட்டதன் மூலம் சாமி குத்தம் நீங்கியதாக கிராம மக்கள் நம்பினர்.

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் எருதுவிடும் விழா நடைபெறும் கிராமங்களில் விழா தடைப்பட்டால் ஊர் கவுண்டரை வைத்து சாமிகுத்தத்தை தவிர்ப்பதற்காக இது போன்று செயல்படுவது வழக்கம்.

Tags:    

Similar News