தமிழ்நாடு (Tamil Nadu)

மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் திரண்ட கிராமமக்கள்- போட்டி போட்டு மீன்பிடித்தனர்

Published On 2023-03-25 04:42 GMT   |   Update On 2023-03-25 04:42 GMT
  • மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
  • மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் அவதரித்த இங்கு பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் திருவாதவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

வருடந்தோறும் விவசாயம் முடிந்தவுடன் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி விவசாய பணிகள் முடிந்த நிலையில் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், சிறுவர்-சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் நேற்று இரவு முதலே கண்மாய் கரையில் திரண்டனர். இன்று காலை ஊர் பெரியவர்கள் கொடியசைத்ததுடன் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, உளுவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. சிலருக்கு குறைந்த அளவு மீன்கள் கிடைத்தன.

மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News