தமிழ்நாடு

எதிரி, துரோகிகளை சமாளித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுகொண்டு எழுவோம்- கோகுல இந்திரா

Published On 2024-02-26 04:24 GMT   |   Update On 2024-02-26 04:24 GMT
  • தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம்.
  • சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அ.தி.மு.க. அண்ணா பெயரை தாங்கி நிற்கின்ற கட்சி. உங்களுக்கு நாங்கள் அடிமை அல்ல.


நாங்கள் ஒரு தாம்பாளத்தில் 2 கோடி தொண்டர்களை வைத்துள்ளோம். உங்களிடம் போய் அடிமை சாசனம் வாசிக்க தேவையில்லை. தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா தமிழகம் வந்தாராம் பத்து தொகுதி எங்களிடம் கொடுத்து விடுங்கள். 10 தொகுதி மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறோம் என தெரிவித்தாராம்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என பிரித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது இ.பி.எஸ். மட்டுமே அமித்ஷா இல்லை. எதிரி மற்றும் துரோகிகளை சமாளித்து மத்தியில் இருக்க கூடியவர்களின் மிரட்டல்களை சமாளித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுகொண்டு எழுந்து வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News