தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 9 பேர் கைது: விருத்தாசலத்தில் தொடர்ந்து பதட்டம்
- மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
- இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன். முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். மேலும் மணவாளநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இளையராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்வதற்காக இளையராஜா நேற்று மாலை 4 மணிக்கு தனது விளை நிலத்திற்கு சென்றார். அப்போது அவர், அங்கு வந்த வேளாண்மைத்துறை அதிகாரியுடன், பயிற்சி கூட்டம் தொடர்பாக பேசினார்.
கூட்டம் முடிந்து மாலை 5.30 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களை பார்த்ததும், இளையராஜா தனது காரை நோக்கி ஓடினார். உடனே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால், இளையராஜாவை நோக்கி சுட்டார்.
இதில் துப்பாக்கி குண்டு, அவரது இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, தனது காரில் ஏறி கதவை பூட்டிக் கொண்டு, தப்பிச் செல்ல காரை இயக்க முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் இளையராஜாவை நோக்கி சுட்டார்.
அந்த குண்டு கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு, அவரது கழுத்தில் பாய்ந்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. மேலும் அந்தகும்பல் 2 முறை கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து இளையராஜா, காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். ரத்தக்கறையுடன் வந்த அவரை மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய ராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் தலைமையிலான விருத்தாசலம் போலீசார், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து இளையராஜாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான் வேளாண்மைத்துறை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பார்வையிட சென்றேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் வந்தனர். அதில் 2 பேர் துப்பாக்கியால் என்னை சுட்டனர். இதில் இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்றார். இதனிடையே இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஆடலரசன், புகழேந்திராஜா, சூர்யா, வெங்கடேசன், சதீஷ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கள்ள துப்பாக்கி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.