ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக சரிவு
- ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
- சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 9-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.
இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கிற மழையை பொறுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இது சற்று குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியானது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வருவதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 9-வது நாளாக நீடிக்கிறது.
இதற்கிடையே காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிட கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.