'எனக்கோ 2-வது மனைவி; அவளுக்கு நான் 3-வது கணவர்': போலீஸ் அதிகாரியை தலைசுற்ற வைத்த டிரைவர்
- ‘மருதமலை’ திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது.
- டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
தனது 2-வது மனைவி மகனுடன் மாயமானது குறித்து புகார் கொடுக்க வந்த டிரைவர் அவளுக்கு நான் 3-வது கணவர் என்று கூறியதால் அவரை விசாரித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைசுற்றி கிறங்கி போனார்.
நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போன்று நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு பேண்ட், சட்டை அணிந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்தார். அவரிடம் அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்த போது, தனது மனைவி மற்றும் 5 வயது மகன் மாயமாகி விட்டதாகவும் புகார் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் குறித்து அவர் விசாரித்த போது அவருக்கு தலைசுற்றலே வந்து விட்டது என்று கூறலாம்.
ஆம். நடிகர்கள் அர்ஜூன், வடிவேலு நடித்த 'மருதமலை' திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் அந்த டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது. அந்த பட நகைச்சுவை காட்சியில் போலீஸ் நிலையத்துக்கு தம்பதியாக வந்தவர்களிடம் ஏட்டுவான நடிகர் வடிவேலு விசாரிக்கும் போது, இவர் தான் என் முதல் கணவர், இவர் எனக்கு முறைப்படி தாலிகட்டிய கணவர் என்று அந்த பெண் பட்டியலிட்டு ஏட்டு வடிவேலுவை கிறுகிறுக்க வைப்பார்.
அதேபோல் தான் புகார் கொடுக்க வந்தவரிடம் விசாரித்த போது, அவர் டிரைவர் என்பதும், தனது 2-வது மனைவியும், 5 வயது மகனும் மாயமாகி விட்டதாக கூறி இருந்தார். இதில் என்ன 2-வது திருமணம் தானே என்று யோசிக்க தொடங்கினால், காணாமல் போன பெண்ணுக்கு வந்த டிரைவர் 3-வது கணவராம். இப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலு பாணியில் சற்று தவித்து தான் போனார்.
இருப்பினும் அந்த டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர். தனது 2-வது மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் 3-வது கணவர் புகார் கொடுத்தது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.