சென்னை சவுகார்பேட்டையில் நகை கடை உரிமையாளர் வீட்டில் வருமானவரி சோதனை
- வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி நகை கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
- சோதனையை தொடர்ந்து சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை:
சென்னை சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் உள்ள நகை கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
நகை கடை உரிமையாளர் முறையாக வருமான வரியை கட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை 7 மணி அளவில் நகை கடை உரிமையாளர் வீட்டுக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வீட்டில் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி நகை கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் காரணமாக சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் பரபரப்பு நிலவியது. வருமான வரித்துறையினர் நகை கடை உரிமையாளரை வீட்டுக்கு வெளியே தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு சோதனைக்காக சென்றிருந்தனர்.
இந்த சோதனையை தொடர்ந்து சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நகை கடை உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை. தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.