தமிழ்நாடு (Tamil Nadu)

கமலா ஹாரிஸ் வெற்றி பெறனும்.. சிறப்பு வழிபாடு செய்த சொந்த ஊர் மக்கள்

Published On 2024-07-23 04:17 GMT   |   Update On 2024-07-23 04:17 GMT
  • தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
  • கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் ஜனாதிபதி ஜோ பைடனின் நடவடிக்கைகள் சமீப காலமாக விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக நேரடி விவாதத்தின்போது டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது, உக்ரைன் அதிபரை புதின் என குறிப்பிட்டது மற்றும் மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என சொந்த கட்சியினரே கூறி வந்தனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிசின் பெயரை அவர் முன்மொழிந்தார்.

இவரது இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஸ்டெனோகிராபராக பதவி வகித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி.கோபாலனை அனுப்பி வைத்திருந்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறி உள்ளார். இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் இந்த கமலா ஹாரிஸ்.

இவர் முன்பு வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அரசியலில் இருந்து வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக அவர் பணியாற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News