மீன்பிடி தடைகாலம் எதிரொலி- காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்வு
- சென்னையில் முக்கிய மீன்பிடி துறைமுகமான காசிமேட்டில் தினமும் ஆயிரக்கணக்கான எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள்.
- காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருவார்கள்.
சென்னை:
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் கிழக்கு கடற்கரை பகுதிகளில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஜூன் 16-ந்தேதி வரை 61 நாட்கள் அமலுக்கு வந்தது.
சென்னையில் முக்கிய மீன்பிடி துறைமுகமான காசிமேட்டில் தினமும் ஆயிரக்கணக்கான எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள்.
காசிமேடு மீன் என்றாலே அது தனி சுவை. எந்த கலப்படமும் இல்லாதது. தரமானது. எனவே காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருவார்கள்.
இந்தநிலையில் தடைக்காலம் தொடங்கியதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்றே விலை ஏறியது. நேற்று ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1000-ம் ஆகவும், சங்கரா ரூ.350-ல் இருந்து ரூ.400 ஆகவும், இறால் ரூ.300-ல் இருந்து ரூ.400 எனவும் மீன்களின் விலை ஏறியது.
காசிமேடு மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் ஏராளமானோர் மீன் வாங்க திரண்டனர்.
தடை காலத்தில் விலை உயர்வது குறித்து காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர் சவுந்தர் கூறியதாவது:-
காசிமேட்டில் விற்கப்படும் மீன்கள் தரமாகவும், ருசியாகவும் இருப்பதால் இங்கு மீன் வாங்க போட்டி போட்டு வருவார்கள். தடைக்காலங்களில் மீன்களின் வரத்து குறைவதால் பைபர் மற்றும் கட்டுமரங்களில் வரும் மீன்களே. மார்க்கெட்டில் விற்கப்படும்
இனி நாட்கள் செல்லச் செல்ல விலை அதிகரித்து அடுத்த வாரத்தில் 30 சதவீதம் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களுக்கான நிவாரணத்தொகை மீனவர்கள் நலன் கருதி ரூ.5000-ல் இருந்து ரூ.8000 மாக அதிகரித்து தர அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.