தமிழ்நாடு

இந்திக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்- பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது: கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2022-10-29 07:03 GMT   |   Update On 2022-10-29 07:03 GMT
  • அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும்.
  • தேவையில்லாமல் பா.ஜ.க., இந்தியை திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது.

பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை திணித்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்தி திணிப்பிலிருந்து இந்தி பேசாத மக்களுக்கு அன்றைய பிரதமர் நேரு 60 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலும், தொடர்ந்து வந்த காங்கிரஸ் ஆட்சிகள் வழங்கிய சட்டப் பாதுகாப்பின்படியும் தான் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும். இதில் தேவையில்லாமல் பா.ஜ.க., இந்தியை திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.

ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News