கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க.வும், காங்கிரசுமே பொறுப்பு- எல்.முருகன்
- தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
- 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகத்தை இன்று மத்திய மந்திரி எல்.முருகன் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சத்தீவு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒப்புதலுடன் தான் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. அது குறித்து தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரிய ஆதாரங்களுடன் விளக்கி அதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு முழு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தான். இதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு தான். இதனால் இன்று வரை தமிழக மீனவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே மீனவர்களின் இந்த நிலைக்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.