தமிழ்நாடு

பூதக்கண்ணாடி போட்டு தேடி தேடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த கவர்னர் முயற்சி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2023-05-06 06:20 GMT   |   Update On 2023-05-06 06:20 GMT
  • கவர்னர் அரசின் மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு ஏதாவது கிடைக்காதா? என்று தேடி தேடி அலைகிறார்.
  • எதுவும் கிடைக்காததால் ஒரு சிறுமியை சாட்சியாக வைத்து தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தி இருக்கிறார்.

சென்னை:

சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ பரிசோதனை முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமண விவகாரத்தில் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு போலீஸ் டி.ஜி.பி. தெளிவாக பதில் அளித்துவிட்டார். இருப்பினும் துறை சார்ந்து பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது.

கவர்னர் குழந்தை திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை நடந்ததாக நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

அவர் சொன்ன குற்றச்சாட்டுக்காக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை கேட்டுள்ளது.

சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக கவர்னர் கூறியது தொடர்பாக மருத்துவ அலுவலர்கள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அவர்கள் விசாரணையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

கவர்னர் அரசின் மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு ஏதாவது கிடைக்காதா? என்று தேடி தேடி அலைகிறார்.

எதுவும் கிடைக்காததால் ஒரு சிறுமியை சாட்சியாக வைத்து தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News