தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றினால் கவர்னர் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும்- அமைச்சர்

Published On 2023-03-09 04:26 GMT   |   Update On 2023-03-09 04:26 GMT
  • தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
  • ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு

சென்னை:

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:-

தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதிமன்றம், சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்யவில்லை.

வேறு சில காரணங்களை சொல்லி அதாவது இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீங்கள் புதிய சட்டம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி சட்டமன்றத்துக்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

அதன்படி இந்த புதிய சட்டம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு. நீங்கள் புதிய சட்டம் இயற்றுங்கள் இதில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு இயற்றுங்கள் என்று சொல்கிற போது அதை அதிகாரம் இல்லை என்று கூறி நீக்க எந்த அடிப்படையில் கவர்னர் நீக்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

அதைப்பற்றி தெளிவாக அவர் என்ன அனுப்பி இருக்கிறார் என்பதை கோப்புகளை படித்து விட்டு தெளிவான விடையை நிச்சயமாக முதலமைச்சர் தருவார்.

இந்த மசோதா 2-வது முறை அல்ல, முதல் முறையாக திருப்பி அனுப்பி உள்ளார்கள். இதற்கு முன்பு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லி இருந்தோம்.

இதை திருப்பி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது. அது தான் சட்டம்.

கேள்வி: கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவுடன் ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

பதில்: நான் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தான் சென்னை வந்தேன். கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியாது. அவர் அனுப்பியதை படித்து பார்த்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும். நானாக எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News