தமிழ்நாடு (Tamil Nadu)

கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி அரசு உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-12-02 07:42 GMT   |   Update On 2023-12-02 07:42 GMT
  • தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

ஊட்டி:

ஊட்டியில் நடந்த இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான்.

நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் தி.மு.க.வில் தான் தொடங்கப்பட்டது.

2 மாதத்திற்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு.

பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால் அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால் நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர்.

எங்கு போனாலும் தி.மு.க.வை பற்றி பேசுவதே அமித்ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித்ஷா வல்லவர். அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகின்றனர்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் கலைஞரின் குடும்பம் தான்.

தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய ஆட்சி தான் தி.மு.க. மாணவ சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திடங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாவலராக தி.மு.க அரசு உள்ளது.

மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News