தமிழ்நாடு

செம்மொழி பூங்கா அமைய உள்ள இடம்.

மு.க.ஸ்டாலின் 18-ந்தேதி கோவை வருகை: செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2023-12-13 05:12 GMT   |   Update On 2023-12-13 05:12 GMT
  • மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கோவை:

கோவையில் கடந்த 2021 நவம்பர் 22-ந்தேதி நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

சிறையை வேறு இடத்துக்கு மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால் செம்மொழி பூங்கா திட்டத்தை பேஸ்-1, பேஸ்-2 என பிரித்து முதல்கட்டமாக சிறைத்துறை வழங்கிய 41 ஏக்கர் நிலத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.172 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

இதைத்தொடர்ந்து காந்திபுரம் மத்திய சிறை அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 18-ந் தேதி கோவையில் நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

பின்னர் எஸ்.என்.ஆர். கல்லூரியில் நடைபெறும் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அன்றைய தினம் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு கோவைக்கு வருகிறார். நிகழ்ச்சிகள் முடிந்து அன்று பிற்பகல் 2.10 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். மேலும் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News