தமிழ்நாடு

ரூ.44 லட்சத்துடன் வங்கி கேஷியர் மாயம்: கடத்தப்பட்டதாக வெளியான வாட்ஸ்-அப் ஆடியோவால் பரபரப்பு

Published On 2023-04-26 11:00 GMT   |   Update On 2023-04-26 11:04 GMT
  • வங்கி அதிகாரிகள், கேஷியரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
  • ரூ.44 லட்சத்துடன் மாயமான வங்கி கேஷியர் சென்னையில் பதுங்கி உள்ளாரா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கு கேஷியராக பணியாற்றி வருபவர், நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தார்.

அப்போது கேஷியர் அறைக்கு சென்ற அவர், அங்குள்ளபெட்டியில் கட்டுக்கட்டுகளாக இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து, தான் கொண்டு வந்திருந்த ஒரு பையினுள் போட்டார். பின்னர் காலை 10.45 மணியளவில் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி அந்தபையுடன் வங்கியில் இருந்து வெளியே சென்றார்.

ஆனால் வெகு நேரமாகியும் அவர், வங்கிக்கு வரவில்லை. அவரது அறையில் வேறொருவர், கேஷியர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வங்கியின் சேமிப்பு கணக்கு விவரத்தை அங்கிருந்த கணினி மூலம் சரிபார்த்தபோது ரூ.43 லட்சத்து 89 ஆயிரம் இருப்பு இருந்ததும், ஆனால் அந்த பணம், வங்கியில் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே வங்கி அதிகாரிகள், கேஷியரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. நீண்டநேரமாகியும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினரை வங்கி அதிகாரிகள் தொடர்புகொண்டு விசாரித்தபோது வீட்டிற்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அந்த பணத்துடன் கேஷியர் தலைமறைவாகி இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து வங்கியின் கிளைமேலாளர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், வங்கியில் இருந்த பணத்தை கேஷியர், எடுத்துச்சென்று விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தருமாறும் கூறியிருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் போலீசார் விசாரித்தபோது, அந்த கேஷியரின் செல்போன், கடைசியாக சென்னை அருகே திருவான்மியூர் பகுதியில் சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில் அவர், தனது உறவினர் ஒருவருக்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பியுள்ளதோடு, வாட்ஸ்-அப்மூலம் ஆடியோவாக பேசியும் அனுப்பியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அதில், அந்த காசாளர் கூறியிருப்பதாவது:-

நான் இப்போது எங்கு இருக்கிறேன் என எனக்கு தெரியவில்லை. ஒரு கும்பல் என்னை மிரட்டி பணம் எடுத்து வரும்படி சொன்னார்கள். நானும் அவர்களுக்கு பயந்து பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என்னிடம் அவர்கள் ரொம்ப நாட்களாக பணம்கேட்டு டார்ச்சர் செய்தார்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

நான் கூட்டேரிப்பட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து பஸ் ஏறினேன். அவர்கள், என்னை அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றார்கள். நான் தற்போது எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை. அந்த கும்பல், வங்கி கேஷியரை பார்த்து டார்க்கெட் செய்கிறார்கள். ஆகவே பத்திரமாக இருங்கள், எனது உடல் கிடைக்குமோ, கிடைக்காதோ என தெரியவில்லை என்று கண்ணீர்மல்க பேசியுள்ளார்.

வங்கி கேஷியர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் அவரது அக்காவுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார். எனவே அவர் கடத்தல் நாடகம் ஆடுவதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது செல்போன் சென்னை திருவான்மியூரில் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருப்பதால் அவர் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

மேலும் காஞ்சிபுரம், வேலூர், புதுவை ஆகிய இடங்களுக்கும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ரூ.44 லட்சத்துடன் வங்கி கேஷியர் மாயமான சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News