தமிழ்நாடு (Tamil Nadu)

உணவு பாதுகாப்பு துறையை மேம்படுத்த வேண்டும்- அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Published On 2022-08-21 08:40 GMT   |   Update On 2022-08-21 08:40 GMT
  • தரமற்ற உணவு காரணமாக, உணவகங்களை நம்பி வசிப்போர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
  • உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக, வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு வருபவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் உள்ளனர். இதற்கேற்ப உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன.

பெரும்பாலான சைவ மற்றும் அசைவ உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையினரின் ஆய்வு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய உணவகங்களில்கூட, சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததையும், உணவுப் பொருட்களில் புழு, பூச்சியும், கெட்டுப்போன இறைச்சி வைக்கப்பட்டு இருந்ததையும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

தரமற்ற உணவு காரணமாக, உணவகங்களை நம்பி வசிப்போர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து உணவகங்களிலும் காலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தனிக்கவனம் செலுத்தி, உணவகங்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் பாதுகாப்புத் துறையினை மேம்படுத்தி, கால முறை ஆய்வுகளை மேற்கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News