தமிழ்நாடு

அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரம்

Published On 2023-11-02 07:08 GMT   |   Update On 2023-11-02 07:08 GMT
  • அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
  • அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாராவதி கடல் பகுதியில் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மீட்டர் கேஜ் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இரு பகுதியிலிருந்து திறந்து மூடும் வகையில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள இந்த பாதையில் ரெயிலில் செல்வதை வாழ்நாள் கனவாகவும் கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த பாலம் 106 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது மற்றும் சேதம் காரணமாக தொடர்ந்து அந்த பாதையில் ரெயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆண்டு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் பாம்பன் ரெயில் பாலம் கட்டுமான பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினர். இதன் பின்னர் பணிகள் தொடங்கியது. தற்போது மண்டபத்தில் இருந்து மையப்பகுதி வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதேபோன்று பாம்பனில் இருந்து மையப்பகுதி வரை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் பொருத்தப்பட உள்ள தூக்கி இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலம் 500 டன் எடையை கொண்டுள்ளது.

இந்த பாலம் முழுமையாக பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு கொண்டு செல்லுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

அதன் எதிரொலியாக அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

Tags:    

Similar News