தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் - சென்னையில் 23 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை

Published On 2024-05-29 10:14 GMT   |   Update On 2024-05-29 10:14 GMT
  • 1,433 பேர் பங்கேற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
  • ஓட்டு எண்ணும் பகுதியில் 22 சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படுகிறது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 4-ந் தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளை எண்ணுவதற்காக அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவான மின்னணு எந்திரங்களை சீல் அகற்றி திறப்பது, அதன் பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எவ்வாறு கணக்கிட்டு எண்ண வேண்டும் என்பது சம்பந்தமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் வட சென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்பட உள்ளன.

இதற்காக வடசென்னைக்கு 357 ஊழியர்கள், தென் சென்னைக்கு 374 ஊழியர்கள், மத்திய சென்னைக்கு 380 ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் இன்று நடைபெற்றது.

மொத்தம் 1,433 பேர் பங்கேற்ற இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சி இரவு வரை நடக்கிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 14 மேஜைகளும் மத்திய சென்னைக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் 16 மேஜைகளும், சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 30 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

ஸ்ட்ராங் அறை ஸ்டோர் அறையில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பகுதி, வளாகம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.


ஓட்டு எண்ணும் பகுதியில் 22 சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படுகிறது. ஓட்டு எண்ணும் ஊழியர்கள் எந்த சட்டமன்ற தொகுதிக்கு போகிறார்கள் என்பது 3-ந்தேதி காலை 8 மணிக்கு முடிவு செய்யப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் பொது பார்வையாளர்கள் 1-ந் தேதி வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் 2-வது கட்ட பயிற்சி 3-ந்தேதி நடத்தப்படும். எந்த மேஜையில் யார் பணியில் ஈடுபடுவது என்பதை தீர்மானிக்கும் கடைசி கட்ட பணியாளர்கள் தேர்வு 4-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். 18 சட்டமன்ற தொகுகளிலும் மொத்தம் 268 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். மொத்த சுற்றுகள் 321 ஆகும். எழும்பூர், துறைமுகம், ராயபுரம் சட்டசபை தொகுதிகளில் குறைந்த பட்சமாக 13 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படும். அதிகபட்சமாக திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் தொகுதியில் 23 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்றுக்களின் இறுதி முடிவை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவிப்பார்கள்.

தபால் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். ஒவ்வொரு மேஜைக்கு 500 ஓட்டுகள் வீதம் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டாலும் கடைசியில் தான் முடிவு அறிவிக்கப்படும்.

ஒரு மேஜைக்கு ஒருவர் வீதம் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வேட்பாளர்களின் அடிப்படையில் மொத்தம் 14,290 முகவர்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். வடசென்னை 5040 முகவர்கள், தென் சென்னை 4786, மத்திய சென்னைக்கு 4464 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வடசென்னை தொகுதி தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜா உடனிருந்தார்.

Tags:    

Similar News