தமிழ்நாடு

மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் புதுவை-சென்னை விரைவு ரெயிலை முற்றுகையிட்டு பயணிகள் போராட்டம்

Published On 2023-08-28 08:28 GMT   |   Update On 2023-08-28 08:28 GMT
  • ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
  • பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

மதுராந்தகம்:

புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு பயணிகள் விரைவு ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வேலை பார்த்து வரும் மதுராந்தகம், செய்யூர், சூனாம் பேடு, பவுஞ்சூர், கூவத்தூர், தச்சூர், பெரும்பாக்கம், எண்டத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தினந்தோறும் பயணம் செய்வது வழக்கம்.

மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து காலையில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட்டம் அதிகம் இருக்கும்போது பயணிகள் சிலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துவந்தனர்.

இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 7.20 மணிக்கு வழக்கம்போல் புதுச்சேரி-சென்னை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்ததால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளால் அதில் ஏறமுடியவில்லை.

இதையடுத்து அவர்கள் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏற முயன்றனர். ஆனால் அதில் ஏற்கனவே இருந்த பயணிகள் ரெயில் பெட்டியின் கதவுகளை மூடி இருந்ததாக தெரிகிறது. இதனால் பயணிகளால் ரெயிலில் ஏறமுடியாத சூழல் ஏற்பட்டது. ரெயிலும் புறப்பட தயாரானது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் மற்றும் சிக்னல் இயக்கும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ரெயில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பின்னால் தென்மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மேல்மருவத்தூர், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் சமாதானம் பேசி அதில் பயணிகளை ஏற அனுமதித்தனர். பயணிகள் அனைவரும் ரெயிலில் ஏறியதும் சுமார் 30 நிமிடம் தாமதமாக சென்னை நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News