தமிழ்நாடு (Tamil Nadu)

தடையை மீறி போராட்டம்- எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது

Published On 2022-10-19 04:02 GMT   |   Update On 2022-10-19 05:40 GMT
  • அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
  • சட்டசபையில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். சட்டசபை விதிகளின் படி துணைத் தலைவர் பதவி கிடையாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்காததால் சபாநாயகர் செயலை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி இன்று அதிகாலை முதலே வள்ளுவர் கோட்டம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள்.

அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதையும் மீறி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரள ஆரம்பித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை அணிந்தபடி அங்கு வந்தார்.

அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை பார்த்து எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கோஷமிட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்காததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் எடப்பாடி பழனிசாமியிடம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் அரை மணி நேரமாவது எங்களுக்கு போராட அனுமதி தாருங்கள் என கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்து விட்டனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் 62 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த 7 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டனர்.

அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் கைது நடவடிக்கையை எதிர்த்து கோஷமிட்டனர்.போலீசாருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்த போதிலும் அங்கிருந்து கலைய மறுத்த அ.தி.மு.க.வினரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினார்கள்.

பின்னர் கைதான எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பஸ்களில் இருந்து கீழே இறங்கி வந்த போது அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

அ.தி.மு.க. தர்ணா போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News