மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம்: மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு
- மெரினா போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மெரினாவில் நடைபெற்ற திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை:
மணிப்பூரில் 2 இளம்பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று இரவு போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காந்தி சிலை அருகே திடீரென திரண்டு அனுமதி இல்லாத இடத்தில் போராட்டம் நடைபெற்றதால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக மெரினா போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மெரினாவில் நடைபெற்ற இந்த திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வெளியில் அனுப்பி வருகிறார்கள்.