தமிழ்நாடு

பிரதமர் மோடி நெல்லைக்கு முதல் முறையாக வருகை

Published On 2024-02-26 06:53 GMT   |   Update On 2024-02-26 06:53 GMT
  • பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது.

நெல்லை:

தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி நாளை மறுநாள் (புதன்கிழமை) தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து நெல்லை வரும் பிரதமர் மோடி, பாளை நீதிமன்றம் எதிரே பெல் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா நெல்லை பாராளுமன்ற தொகுதி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அவர் விழா மேடைக்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் ஜான்ஸ் பள்ளி மைதானத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் சுற்றளவில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், சாலையோர பழக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

விழா மைதானம், ஹெலிகாப்டர் வந்திறங்கும் மைதானம் உள்ளிட்டவை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி நெல்லையில் 10 போலீஸ் சூப்பிரண்டுகள், 14 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்காக காவல்துறையின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வருகின்றனர். இதுதவிர மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பிரதமர் மோடி நெல்லைக்கு முதல் முறையாக வருகை தர இருக்கும் நிலையில் விழா மேடைக்கு அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு சென்று சோதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News