தமிழ்நாடு

ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-05-27 07:22 GMT   |   Update On 2023-05-27 07:22 GMT
  • 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
  • 6 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து 6 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஊத்துக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றுப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 6 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து 6 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஊத்துக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் வக்கீல் ஜீவா, எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அறிவுச் செல்வன், ஊத்துக்கோட்டை நகரப் பொருளாளர் ஜெபா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மஸ்தான், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலச் செயலாளர் கரீம், தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நாகராசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெரியசாமி, செஞ்சிறுத்தைகள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சலீம் பாய், கிழக்கு மாவட்ட செயலாளர் புகாரி மற்றும் பலர் கலந்து கொண்டு 6 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி கண்டன முழுக்கங்கள் எழுப்பினர். தமிழர் விடுதலை இயக்கத்தை சார்ந்த ஆனந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News