தமிழ்நாடு

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு பரிந்துரைக்க மேலும் ஒரு ஆண்டா? ராமதாஸ் கண்டனம்

Published On 2024-07-24 06:20 GMT   |   Update On 2024-07-24 06:20 GMT
  • வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
  • ஆணையத்தின் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு காலம் தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 12 மாதங்கள் கூடுதல் காலக்கெடு கோருவது தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த பாதை தெளிவாக கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கு பதிலாக இடது புறத்தில் திரும்பலாம் என தமிழக அரசும், வலதுபுறத்தில் திரும்பலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மீண்டும், மீண்டும் தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடாது.

வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களும் தயாராகவே உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News