மீனவர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்- ஜெயபெருமாள்
- கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு.
- மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. ஜெயபெருமாள் மண்டபம் கேம்ப் மற்றும் பாம்பன் ஆகிய மீனவ கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது வழியெங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். மக்கள் மத்தியில் வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:-
நான் சாதாரன விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது பையனுக்கு ராமேஸ்வரத்தில் பெண் எடுத்துள்ளேன். நான் அடிக்கடி ராமேஸ்வரத்துக்கு வந்து செல்கிறேன். மீனவர்களின் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மேம்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சிதான். கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு. கச்சத்தீவை தாரைவார்த்தவர்களே கச்சத்தீவு குறித்து பிதற்றுகிறார்கள். மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.
நான் உங்களில் ஒருவன். மீனவர் நலனில் அக்கரை உள்ளவன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கே.சி.ஆணிமுத்து, மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சசிவணன், திருவாடனை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆசை ராமநாதன், வடக்குஒன்றிய செயலாளர் ஏ.ஆண்டவர், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் செ.நாகராஜன் ராஜா மற்றும் தே.மு.தி.க., எஸ். டி.பி.ஐ., புதிய தமிழகம், மருது சேனா நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.