தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்- அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு
- ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் நாளை போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை :
தமிழகத்தில் நாளை 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்த ஐகோர்ட்டு, 11 நிபந்தனைகளை மீறி யாராவது செயல்பட்டால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தமிழகம் முழுவதும் நாளை போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், குமரி மாவட்டம், அருமனை, நாகர்கோவில் ஆகிய 6 இடங்களில் அணி வகுப்புக்கு கோர்ட்டே தடைவிதித்துள்ள நிலையில் இந்த பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை பொறுத்தவரையில் உரிய அனுமதி பெற்றே அணிவகுப்பை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இருப்பினும் அதுதொடர்பாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த உறுதியுடன் உள்ளனர். இதன் காரணமாகவே மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.