தமிழ்நாடு

ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்- சரத்குமார் அறிக்கை

Published On 2023-01-10 06:45 GMT   |   Update On 2023-01-10 06:45 GMT
  • தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின் போராட்டம் மற்றும் உயிர்த்தியாகத்தால் தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் பெற்றது. முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அதன் காரணமாக 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு'என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது. தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14-ல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக இருக்கும். மேலும், தமிழ்நாடு பெயர் உருவாக காரணமாக அமைந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு மெரீனாவில் சிலை வைத்தும், அவர் தியாகத்தை கவுரவிக்கும் விதமாக, தியாகி சங்கரலிங்கனார் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இனி எந்தவொரு காலக்கட்டத்திலும் தமிழ்நாடு, 'தமிழ்நாடு' என்றே அழைக்கப்படும். ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News