தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்வு
- 120 அடி கொண்ட ஆழியார் அணையில் தற்போது 95.80 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
- மழையால் ஆழியார் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது.
தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்ததால் கருமலை, அக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை, வால்பாறை, சின்னக்கல்லார், பெரியகல்லார், கூட்டுறவு காலனி, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 23-வது கொண்டை ஊசி வளைவில் பாறை உருண்டு, நடுரோட்டில் விழுந்தது.
இதேபோல் 18-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
வால்பாறையில் பெய்யும் கனமழைக்கு கூழாங்கல், நடுமலையாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வால்பாறை அரசு போக்குவரத்து பணி மனைப்பகுதியில் ஆற்று நீர் புகுந்தது. இதேபோல் ஸ்டேன்மோர் ஆத்து மட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மழை குறைந்த பின்னர் அங்கிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வால்பாறை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணை உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சோலையார் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நீடிக்கும் கனமழையால் சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோலையார் அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி. நேற்று சோலையார் அணையின் நீர்மட்டம் 128 அடியாக இருந்தது.
இன்று அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,753.23 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,069.91 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பரம்பிக்குளம் அணையின் மொத்த நீர்மட்டமான 72 அடியில் தற்போது 29.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,397 கனடி நீர் வருகிறது. அணையில் இருந்து 57 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
120 அடி கொண்ட ஆழியார் அணையில் தற்போது 95.80 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மழையால் ஆழியார் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,356 கன அடி தண்ணீர் வருகிறது. 84 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.