நோயாளியுடன் செல்பி எடுத்து முகநூலில் வெளியீடு: அரியலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பணி நீக்கம்
- மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
- மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மருத்துவமனையின் ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார்.
அப்போது ஒரு டாக்டர், 2 நர்சுகளும் உடன் இருந்தனர். பின்னர் அந்த புகைப்படத்தை மணிகண்டன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதர சமூக வலைதளங்களிலும் அதை வெளியிட்டார்.
இதை உயர் அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், மருத்துவக்கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது மணிகண்டன், அவரது மனைவி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவமனை ஆபரேசன் அறையில் பணியில் இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும், இது இணையத்தில் எப்படி வைரலானது என எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். மணிகண்டன் போட்டோ எடுத்தபோது பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரது மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.