தமிழ்நாடு

தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களாக எங்களை பாவித்து விழாக்களுக்கு அழைக்கின்றனர்- வடமாநில தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

Published On 2023-03-07 05:04 GMT   |   Update On 2023-03-07 07:24 GMT
  • தமிழர்கள் எங்களுடன் அன்பாக பழகி வருகின்றனர்.
  • நிம்மதியாக நல்ல நண்பர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுைர, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தனியார் மில்கள் செல்பட்டு வருகின்றன.

இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த சர்ச்சை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தனியார் மில்களுக்கு சென்று வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோவை நம்பி  யாரும் அச்சமடைய வேண்டாம். இங்கு உங்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. உங்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.

வேடசந்தூர் பகுதியில் உங்களுக்கு நூற்பாலை நிர்வாகம் மற்றும் போலீசார் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார். இதுகுறித்து வடமாநில தொழிலாளியான அசாம் மாநிலம் நல்வாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்லாம் என்பவர் கூறுகையில்,

நான் கடந்த 8 ஆண்டு காலமாக இங்கு பணியாற்றி வருகிறேன். தமிழர்கள் எங்களுடன் அன்பாக பழகி வருகின்றனர். அவர்களின் ஊர்களில் நடந்த திருவிழாவின்போது அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நிம்மதியாக நல்ல நண்பர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பொது மேலாளர் சரவணன், தொழிலாளர் மேற்பார்வையாளர் பிரகாஷ், தொழிலாளர் பொறுப்பாளர் வீரமணி, விடுதி காப்பாளர் சுப்பிரமணி, நிர்வாக விசாரணை அதிகாரி பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து மில்களுக்கும் சென்று இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போலீசார் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News