தமிழ்நாடு (Tamil Nadu)

டாஸ்மாக் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள்- தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. பரபரப்பு புகார்

Published On 2023-02-20 08:01 GMT   |   Update On 2023-02-20 10:12 GMT
  • வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.
  • அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.

சென்னை:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமைச் செயலகத்துக்கு சென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை கொடுத்தார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. அரசு பல்வேறு வகையான குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைந்து, குறுக்கு வழியில் வெற்றிகளை ஈட்டலாம் என எண்ணி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் புதுப்புது தேர்தல் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறது.

அதில் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் தினமும் விற்பனையாகும் பணம் அந்த துறையின் அமைச்சர் சொல்லும் நபரிடம் சேர்க்கப்படுகிறது. அதை அவர்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதாக நாங்கள் அறிகிறோம்.

மேலும், வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.

இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமல்லாமல் அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.

ஏற்கனவே தி.மு.க.வினர், தொகுதி முழுவதும் 111 இடங்களில் கொட்டகை அமைத்து மக்களை அடைத்து வைத்து எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு அவர்களை செல்லவிடாமல் தினந்தோறும் ரூ.1000 வழங்கி, 3 வேளையும் உணவு கொடுத்து ஒரு புதுவித ஈரோடு தேர்தல் பார்முலாவை கையில் எடுத்திருக்கக்கூடிய இந்த வேளையில், தற்போது டாஸ்மாக் விற்பனை பணத்தை அதே தொகுதிக்கு செலவழித்து, அரசாங்கப் பணத்திலும் எப்படி தேர்தல் பணி செய்யலாம் என்கின்ற ஒரு பார்முலாவை இந்த தேர்தலில் புகுத்தி இருக்கிறார்கள்.

எனவே, உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் இந்த நவீன முறைகேட்டில் ஈடுபடும் தி.மு.க. நிர்வாகிகள் மீது கவனம் செலுத்தி, முறையாக டாஸ்மாக் விற்பனை பணம் அன்றைய தினமே அரசு கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் விற்பனை பணத்தை வசூல் செய்து அதை உரிய வங்கிகளில் அரசாங்கக் கணக்கில் வரவு வைப்பதற்கு, இந்தத் தேர்தல் முடியும்வரை ஒரு தனி அதிகாரியை நியமித்து மேற்பார்வை இடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து இன்று மீண்டும் புகார் அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீர் போல் வாரி இறைக்கிறார்கள். மேலும் வாக்காளர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அங்கு தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் செத்துவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அறைபோட்டு விஞ்ஞான ரீதியாக யோசித்து தேர்தல் விதிகளை மீறி வருகிறார். ஈரோடு தொகுதியில் உள்ள 40 டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் வருவாயை தேர்தல் பணிக்கு பயன்படுத்தி வருகிறார். தி.மு.க.வினர் தொடர்ந்து தேர்தல் விதி முறைகளை மீறி வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News