கள்ளக்காதலன், தோழியுடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து தலையணையால் அமுக்கி கணவரை கொன்ற ஆசிரியை
- தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.
- கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தோழி வித்யா, கள்ளக்காதலன் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நங்கவள்ளி:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மலையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர ராஜ் ( 32). நெசவு தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.
கடந்த 17-ந்தேதி சுந்தர ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக அவரது தந்தை அர்த்த நாரீஸ்வரர் என்பவர் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே சுந்தரராஜ் கழுத்தில் காயம் இருந்தது. இதனால் அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறையில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கள்ளக்காதலன் தினேஷ் (24) என்பவருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. உடனே போலீசார் நிவேதாவை கைது செய்தனர்.
மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தோழி வித்யா (27), கள்ளக்காதலன் தினேஷ் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதில் நிவேதா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் சுந்தர ராஜ் பெங்களூருவில் வேலை பார்த்தபோது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சொந்த ஊரிலேயே தறித்தொழில் செய்து வந்தார்.
அவர், பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்ததும் நான் ஜலகண்டாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்தேன். அப்போது பள்ளி தோழி வித்யா அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர் மூலம் எனக்கு தறி தொழிலாளி தினேஷ் அறிமுகமானார்.
பின்னர் நானும், தினேசும் செல்போனில் பேசி நெருக்கமானோம். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தேன்.
ஒரு கட்டத்தில் எங்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. இதை அறிந்த எனது கணவர் சுந்தரராஜ், என்னை கண்டித்து செல்போனை பறித்துக் கொண்டார்.
எங்களது இந்த தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.
இந்த நிலையில் ஆடி 1-ந் தேதி மாமனார், மாமியார் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இது எங்களுக்கு சாதகமாக இருந்தது. சம்பவத்தன்று இரவு சுந்தரராஜிக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்தேன். பின்னர் கள்ளக்காதலன் தினேசை வீட்டிற்கு வரவழைத்தேன். அவர் வந்ததும், சுந்தரராஜ் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு, தற்கொலை செய்தது போல் தூக்கில் கட்டி தொங்கவிட்டோம்.
இதையடுத்து நான் அதிகாலை 4 மணிக்கு மாமனாருக்கு போன் செய்து சுந்தரராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக கூறினேன். மேலும் யாருக்கும் சந்தேகம் வராதபடி இதை நம்ப வைத்து நாடகம் ஆடினேன்.
மேலும் தகவல் அறிந்து பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்த மாமனார்-மாமியாரும் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் மகன் சாவில் சந்தேகம் இல்லை என புகார் கொடுத்தனர்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. சுந்தரராஜ் மூச்சு திணறி இறந்துள்ளதும், அவர் கழுத்து இறுகாமல் தூக்கில் தொங்கியதும், இது கொலை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக எங்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் நானும், கள்ளக்காதலனும், பள்ளி தோழியும் போலீசில் மாட்டிக்கொண்டோம்.
இவ்வாறு நிவேதா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைதான ஆசிரியை நிவேதா, கள்ளக்காதலன் தினேஷ், தோழி ஆசிரியை வித்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.