காக்களூர் தொழிற்பேட்டையில் மின்தடையால் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கும் அபாயம்
- காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
- காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன, இங்குள்ள தொழிற்சாலை நிறுவளங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக தொழிற்சாலைக்குச் செல்லும் மின்மாற்றி பழுதடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கி உள்ளன. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது காக்களூர் மற்றும் ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் இணைப்பை துண்டித்து அதனை காக்களூர் தொழிற்பேட்டைக்கு பகல் நேரத்தில் மட்டும் வழங்க இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அடுத்த நசரத் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று இரவும் மின்தடை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ரோட்டில் மரங்களை வெட்டிபோட்டு 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் இரு மார்க்கத்திலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் வெங்கல் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிரா மமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிராமமக்களின் திடீர் மறியல் போராட்டத்தால் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.