தமிழகத்தில் பா.ஜ.க.வால் வளர முடியாது- டிகேஎஸ் இளங்கோவன்
- அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.
- தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 470 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் தி.மு.க. கூட்டணி 2 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்றன. அது 46.97 சதவீதம் ஆகும். அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.
இதுதவிர சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினர் 2.66 சதவீத வாக்குகளும், நோட்டா 1.07 சதவீத வாக்குகளும் பெற்று உள்ளன.
ஒவ்வொரு கட்சி ரீதியாக பார்த்தால் 4 கட்சிகள் மட்டும் 10 சதவீத வாக்குகளை தாண்டி இருக்கின்றன. தி.மு.க.- 26.9, அ.தி.மு.க.- 20.46, பா.ஜ.க.- 11.24, காங்கிரஸ் - 10.67 சதவீத வாக்குகள் பெற்று இருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது குறித்து தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வளர முடியாது. பா.ம.க. மற்றும் அதன் மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சில வாக்குகளை பெற்றிருக்கலாம். அவர்களுக்கு என தனிப்பட்ட ஆதரவு இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை. அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்தும் கூட்டணி கட்சிகளால்தான் என்று கூறியுள்ளார்.