தமிழ்நாடு (Tamil Nadu)

மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு: நீலகிரி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது

Published On 2023-11-25 03:45 GMT   |   Update On 2023-11-25 03:45 GMT
  • நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.
  • சில இடங்களில் பாறைகள் விழும் நிலையிலும், மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஊட்டி:

இயற்கை அழகுகள் மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைந்த நீலகிரிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து மகிழ்வார்கள்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

மழையால் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. மேலும், சில இடங்களில் பாறைகள் விழும் நிலையிலும், மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனால், மழை ஓயும் வரை நீலகிரி மாவட்டத்திற்கு இவ்விரு வழித்தடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. குறிப்பாக, இரவு நேரங்களில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது.

இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

குறிப்பாக கோத்தகிரி, குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இங்குள்ள பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், நேரு பூங்கா, கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News