தமிழ்நாடு

இளைஞர் அணி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-10-20 06:36 GMT   |   Update On 2024-10-20 06:36 GMT
  • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
  • கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

சென்னை:

2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள்தான் உள்ளன.

இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் துணை முதலமைச்சரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி வாரியாக மாநில நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் எடுக்கப்படும் விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தது போல் இப்போது சட்டசபை பொதுத்தேர்தலுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதில் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பொறுப்பாளர்களில் பலரை மாற்றி விட்டு அந்த தொகுதிகளுக்கு வேறு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இளைஞரணி மாநில துணைச்செயலாளர்கள் 7 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும், இளைஞரணி அமைப்பாளர்கள் 22 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது தவிர பெண்களுக்கும் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை மேற்பார்வையிட விருகம்பாக்கம் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஏ.2 நிர்வாகிகளும், அவர்களுடன் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் சரிவர பணியாற்றுகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையையும் கவனிக்கின்றனர்.

இவை அனைத்தும் உதயநிதியின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகிறது.

இப்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களில் பலர் வயதில் குறைந்தவர்களாக துடிப்பானவர் ளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் கட்சி பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் சேலத்தில் இன்று மாலை கருப்பூரில் உள்ள தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், இன்பாரகு, இளையராஜா, அப்துல்மாலிக், கோல்டு பிரகாஷ், பிரபு, ராஜா, ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

துணை முதலமைச்சரான பின்னர் முதன்முதலாக இன்று நடைபெறும் இந்த இளைஞரணி கூட்டம் "களத்தில் இளைஞர் அணி" என்ற நோக்கில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இளைஞரணியின் செயல்பாடுகளை தற்போதே தீவிரப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் இளைஞர்களை கவரும் வகையில், திறக்கப்படாமல் உள்ள கலைஞர் நூலகங்களை திறப்பது, எனது உயிரினும் மேலான இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடத்துவது, இளைஞர் அணியின் மூலம் சமூக வலை தள பயிற்சிகளை சிறப்பாக நடத்தி வாக்காளர்களை கவருவது, நகர, பகுதி, பேரூர்களுக்கு திறமையான புதிய நிர்வாகிகளை அறிவித்தல் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிதனியாக போட்டோ எடுத்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

இளைஞரணி நிர்வாகிகள் ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் சமூக வலைதள பதிவில் அவ்வப்போது எவ்வாறு பதிவுகள் போட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட உள்ளார்.

வருகிற சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மூத்த அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசும் போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதோ? என்று பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News