தமிழ்நாடு

வேலூரில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள் மூலம் ஆவினில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு

Published On 2023-06-07 06:56 GMT   |   Update On 2023-06-07 06:56 GMT
  • வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர்.
  • கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம் இயங்கி வருகிறது.

விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். இது தவிர பல ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

ஆவின் அலுவலகத்தில் பால் திருட்டு அடிக்கடி அரங்கேறி வந்தது. இதனை தடுக்க பொது மேலாளர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

இதில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு அருகே உள்ள திமிரி வழித்தடத்திற்கு கொண்டு செல்லப்படும் பால் வண்டியில் பால் திருடிச்செல்வது தெரியவந்தது.

இதனை கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்காணித்ததில், ஆவினில் பால் திருட்டு தொடர் கதையாகி வருவது அம்பலமாகி உள்ளது.

பால் திருட்டை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபோது வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேற்று அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்த போது டி.என்.23 ஏ.சி. 1352 என்ற ஒரே எண்ணில் 2 வேன்களில் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றி கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 2 வேன் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் உடனடியாக வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆவின் அலுவலகத்தில் இருந்த 2 வேன்களுக்கும் சீல் வைத்தனர்.

தொடர்ந்து இன்று ஆவின் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வேன்களை ஆய்வு செய்தனர். இதில் பொய்யான பதிவெண் கொண்ட வேன் எது என்பது கண்டுபிடிக்கப்படும். இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிக்குவார்கள் என தெரிவித்தனர்.

வேலூர் ஆவினில் பால் அளவு குறைந்தபடியே இருந்தது. இதனால் அனைத்து பால் வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். இந்நிலையில் நேற்று வேலூர் ஆவினில் இருந்து திமிரிக்கு இயக்கப்படும் வாகனங்களில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் இயக்குவது தெரியவந்தது.

இதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் வரையில் பால் திருடியிருப்பதும். இப்படி பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது வட்டார போக்குவரத்து துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒரே பதிவெண்ணில் இயங்கிய வாகனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News