தமிழ்நாடு

ஆவின் பாலகத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்த காட்சி.

மனம் திருந்திய பெண் மாவோயிஸ்டு நடத்தும் ஆவின் பாலகம்

Published On 2022-11-19 09:04 GMT   |   Update On 2022-11-19 09:04 GMT
  • பிரபா என்கிற சந்தியா மனம் திருந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் வேலூரில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
  • சந்தியா தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.

வேலூர்:

கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா (வயது 45). இவர், கர்நாடக மாநிலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், மாவோயிஸ்டு அமைப்புக்காகப் பல ஆண்டுகளாகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார்.

2006-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்துவந்த பிரபா மீது கர்நாடகாவில் மட்டும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பிரபா என்கிற சந்தியா மனம் திருந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் வேலூரில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சந்தியா தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அவருக்கு ஆவின் நிர்வாகம் மூலம் வேலூர் மாவட்டம், அரியூர், முருக்கேரி ஸ்ரீ சாய் வசந்தம் கிரக இல்லத்திற்கு எதிரே மாநில நெடுஞ்சாலையில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது.

ஆவின் பாலகத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது சமூகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி வரவேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், மற்றும் சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மனம் திருந்தி வரும் போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் கியூ பிரான்ச் போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், தீபா சத்யன், பாலகிருஷ்ணன் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News